Tuesday, May 16, 2006

காலம்

சிறு வயது அபத்தங்களை நினைத்து
சிரித்துக் கொள்வேன் அவ்வப்பொழுது...
இன்னொரு நாளில் சிரிப்பேன்..
இதை நினைத்தும்.....


காலம் என்ற சொல்லை யார் எனக்கு அறிமுகப்படுத்தினார்கள் என்று எனக்கு ஞாபகமில்லை. ஆனால் இனியும் அந்த சொல்லின் பிரம்மாண்டம் எனக்கு புரிபடவில்லை. பல விநாடிகளின் தொகுப்புதான் காலமா? விநாடி என்பது பூமியின் சுழற்சியிலிருந்து கணக்கிடப்படுகிறதா? அப்படியென்றால் நாம் பூமியிலிருந்து வெளியேறினால், எதை அடிப்படையாக கொண்டு காலத்தை கணக்கிடுவது ?


ஒரு ஓவியம் நம்மை அந்த ஓவியம் வரைந்த கணத்திற்கு கொண்டு செல்கிறது. கதை, கவிதை எல்லாம் அதையே செய்கின்றன. உண்மையில் கலை என்பது காலத்தை சேகரிக்கும் ஒரு வித்தையெனப் படுகிறது


காலமானார் என்ற வார்த்தையை படிக்கும்போதெல்லாம் என்னுடைய ஆச்சரியம் அதிகரிக்கும். ஒரு மனிதனின் வாழ்க்கையை... அவன் கனவுகளை ... அவனுடைய நினைவுகளை எப்படி பூமியின் சுழற்சியோடு தொடர்பு படுத்துவதென்று. காலம் அசைவில்லாமல் நின்றுக் கொண்டிருக்கிறது. நாம் தான் அதை கடந்து போய்க்கொண்டிருக்கிறோம் என்று நினைக்கிறேன்

Sunday, May 07, 2006

சருகின் நடனம்

அது ஒரு அழகான மாலை. காற்றில் ஒரு சிறிய இலை சுருண்டு, சுருண்டு ரம்மியமாக கீழே விழுகின்றது. காற்றில் ஒரு நடனம் போல, அந்த இலையின் அசைவு மிகவும் அழகாக இருந்தது. ... ஒடி வந்த சிறுவன், அந்த சருகை எடுத்து தன் புத்தகத்திற்குள் பத்திரப்படுத்துகிறான். அவனும் என்னைப் போல அந்த காட்சியை பார்த்திருக்கவேண்டும். யோசிக்கிறேன்... உண்மையில் அவன் பத்திரப்படுத்த நினைத்தது சருகையல்ல. சருகின் அசைவை... நாமும் இப்படித்தானே... வாழ்க்கையில் எதையெதையோ சேகரிக்க நினைத்து .... வேறெதையோ சொந்தமாக்கிக் கொண்டு...


பழைய புத்தககடையில் வாங்கிய புத்தகத்தின் உள்ளே இருக்கும் பெயரெழுதிய இரண்டு திரையரங்கு நுழைவு சீட்டுகள், பழைய டைரியில் கண்டெடுத்த ஏதோ ஒரு தினசரி நாள்காட்டியின் ஒரு பக்கம், கல்லூரி கட்டிடத்தின் யாரும் எட்ட முடியாத உயரத்தில் இருக்கும் கரியால் எழுதிய அந்த இரண்டு பெயர்கள்...


எனக்கு தோன்றுவது என்னவென்றால் , உண்மையில் நாம் சேகரித்து வைத்திருக்கும் பல பொருட்களில் எதையோ நாம் தொலைத்து இருக்கிறோம். பத்திரப்படுத்தியது நாம் இழந்துவிட்டோம் என்கிற நினைவை மட்டுமே...

நிழலாக...

எப்பொழுதாவது உங்கள் நிழலை கவனித்திருக்கிறீர்களா... எனக்கு நிழல் ஒரு மிகப்பெரிய அதிசயம். ஒவ்வொரு நிலமும் என் நிழலை வெவ்வேறு விதமாக பிரதிபலிக்கின்றன. பகலில் கருமையாக என்னுடனே நடந்து வரும் நிழல், இரவானதும் பல வண்ணங்களுடன் என்னை கனவாக சூழ்ந்து கொள்கிறது. என்றாவது கனவில் நிழலை பார்த்திருக்கிறீர்களா?. நான் எங்கெங்கெல்லாம் செல்கின்றேன் என்று என்னை ஒரு கருமையான திரவமாக மாற்றி நிலமெங்கும் ஊற்றிக் கொண்டே போகிறது எனது நிழல். பல ஊர்களில், பல இடங்களில் என் நிழலை நான் பார்த்திருந்தாலும், நான் மிகவும் ரசிக்கின்ற நிழல், இனியும் என் சொந்த ஊரில் இருக்கின்றது. இப்பொழுதும் அது அங்கேயே இருக்கின்றது. நான் பார்த்து ரசித்த மரங்களில், சிறிய ஓடைகளில், நான் சிறுவனாக நடந்து திரிந்த பாதைகளில் .... ஊட்டியை விட்டு இனியும் எனது நிழல் வரவேயில்லை. இன்றும் இரவில் கண் மூடினால், நான் என்னை விட்டு, கனவில் இருக்கும் என் நிழலுடன் இணைகிறேன். அங்கே இப்பொழுதும் காடுகளில் சுற்றி அலைகின்றேன் பல வண்ணங்களுடன் என் நிழலும் , கருமையாக நானும்.....